பெங்களூரு அல்சூரில் அமைந்துள்ள, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால சோமேஸ்வரா சுவாமி கோயிலில், திருமணம் செய்து வைக்கும் வழக்கம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும் இக்கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் குறித்து விசாரித்தபோதுதான், ஒரு திடுக்கிடும் உண்மை வெளியானது. சமீபகாலமாக இக்கோயிலில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளில் பலர், குறுகிய காலத்திலேயே விவாகரத்து கோரி நீதிமன்றப் படிகளை ஏறியுள்ளனர்.

இதன் காரணமாக, திருமணங்களை நடத்தி வைத்த கோயில் அர்ச்சகர்கள், விவாகரத்து வழக்குகளில் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து தொடர்பான வழக்குகள் ஐந்திற்கும் குறைவாக இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பாக அர்ச்சகர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல நேரிட்டது.

இந்த அலைச்சலால் மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், கோயிலின் நற்பெயரைக் காக்கும் நோக்கிலும், திருமணங்களை நிறுத்தி வைக்கும் முடிவை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

போலி ஆவணங்களைக் கொடுத்து சிலர் திருமணம் செய்துகொள்வதாகவும், பின்னர் பெற்றோர்கள் புகாரளித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படுவதாகவும் கோயில் நிர்வாக அதிகாரி வி. கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும் சிரமத்தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரிக்கு கோயில் நிர்வாகம் கடிதம் மூலமும் தெரிவித்துள்ளது.

வரலாற்றுப் பெருமைமிக்க இக்கோயிலின் இந்த முடிவு, திருமண பந்தத்தின் இன்றைய நிலை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.