மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறும் கோடிக்கணக்கான விவசாயிகள், தற்போது 21வது தவணையான ரூ.2,000-க்காகக் காத்துக் கிடக்கின்றனர். வழக்கமாக, ஒவ்வொரு நான்கு மாத இடைவெளியில் தவணைகள் வழங்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பணம் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பயனாளிகளின் தனித்துவ அடையாள எண் சரிபார்ப்பு மற்றும் போலிப் பயனாளிகளை நீக்கும் பணிகள் மத்திய அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், தவணைத் தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்தச் சரிபார்ப்பு மற்றும் நீக்குதல் பணிகள் முடிவடைந்ததும், 21வது தவணைத் தொகை இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் அல்லது அடுத்த மாத (டிசம்பர்) தொடக்கத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆதார் அடிப்படையிலான e-KYC-ஐ முடிக்காதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் உடனடியாகப் பதிவு செய்து கொள்வதன் மூலம், தடையின்றி உதவித்தொகையைப் பெற முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
