இந்தியாவின் பெரு நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, மோமோஸ் என்கிற துரித உணவின் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. மாலை நேர சிற்றுண்டி அல்லது இரவு நேரப் பசிக்காக மக்கள் இதனை விரும்பி உண்கின்றனர். சுலபமாகத் தயாரிக்கக்கூடிய மற்றும் சாப்பிடுவதற்கு வசதியான இந்த உணவு, இன்று இந்தியாவின் ஒவ்வொரு நகரின் மூலை முடுக்குகளிலும் மோமோஸ் கடைகள் பெருகக் காரணமாக அமைந்துள்ளது.
View this post on Instagram
மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் மோமோஸ் வண்டி நிச்சயம் இடம்பெறுவதால், இதில் கிடைக்கும் வருமானம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் பிரபலமான ஒரு கிரேட்டர் இது குறித்து ஆராய்ந்த காணொளியை வெளியிட்டு, ஒரு நாள் மோமோஸ் விற்பனையாளரின் வருமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த மோமோஸ் கடையின் பிரபலத்தை எடுத்துரைக்கும் விதமாக, ஒரே ஒரு மணி நேரத்தில் 118 பிளேட் மோமோஸ்கள் விற்கப்பட்டதாக அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தினமும் இயங்கும் அந்தக் கடையில், ஒவ்வொரு பிளேட் மோமோஸின் விலை ரூ. 110 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று ஒரு நாளில் மட்டும் மொத்தம் 950 பிளேட் மோமோஸ்கள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் அன்றைய தினத்தின் மொத்த வருவாய் சுமார் ₹1,04,500 ரூபாய் என்ற பிரமாண்டமான தொகையை எட்டியுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களைப் பகுப்பாய்வு செய்த அந்தப் கிரேட்டர், இதே அளவு விற்பனை தினமும் நடந்தால், மாத வருமானம் ₹30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளார்.
குறைந்த முதலீடும், குறைவான செலவுகளும் கொண்ட ஒரு சிறிய கடைக்கு இந்தத் தொகை மிகப் பெரியது என்பதால், இக்காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. @cassiusclydepereira என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து வெளியான இந்தக் காணொளியைக் கண்டு, “சகோதரரே, இப்படி மோமோஸ் எங்கே விற்கிறது?” என்றும், “இவர் தினசரி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்” என்றும் மக்கள் வேடிக்கையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
