உத்திரப் பிரதேச மாநிலம், சிராவஸ்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில், வயல்வெளிக்குச் சென்ற 30 குழந்தைகள் அங்கு இருந்த ‘ரண’ எனப்படும் செடியின் விஷத் தன்மை கொண்ட காட்டு விதைகளை வேர்க்கடலை எனத் தவறுதலாக எண்ணிச் சாப்பிட்டுள்ளனர். மாலை நேரத்தில் இந்தச் சம்பவத்தை அடுத்து, நேரம் செல்லச் செல்ல திடீரென அனைத்துக் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படத் தொடங்கியது.
குழந்தைகள் வயிறு வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதைக் கண்ட பெற்றோர், அவர்களை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் சிராவஸ்தி மாவட்டத்தில் உள்ள பின்காவின் கேசவ்பூர் பகுதியில் நடந்துள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அக்கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் எம்.எம்.சோன்கர் இது குறித்துத் தெரிவிக்கையில், “விஷப் பொருட்களைச் சாப்பிட்ட இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது 20 குழந்தைகளின் உடல்நிலை ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிள்ளது. இருப்பினும், 10 குழந்தைகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பிறகு, குழந்தைகள் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என்று கூறினார். விஷத் தன்மை வாய்ந்த தாவரங்கள் குறித்து அறியாததால் ஏற்பட்ட இந்தத் தவறு, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
