மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில், 13 வயது சிறுவன் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் கடந்த வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள், கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டபட்ட இவர்கள் அந்த பள்ளியின் மாணவர்கள் அல்ல; ஒருவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் என்றும், இருவரும் பள்ளி வளாகத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பிறகு, சிறுவனின் பெற்றோர் ஆனப்பூர்ணா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தை குற்றம்சாட்டியுள்ளனர். முக்கியமான மருத்துவ பரிசோதனை நடைபெறுவதில் 17 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும், மாவட்ட மருத்துவமனையில் தேவையான வசதிகள் இல்லாததால் பரிசோதனை செய்து கொள்ள முடியவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக எம்.ஒய் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டு, தற்போது இந்த தவறை ஆராய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
