தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் வேளையில், அவற்றைச் சரிசெய்யாமல் முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் அணிந்தார், பொலிரோ காரை ஓட்டிப் பார்த்தார் என்பது போன்ற விளம்பர ‘ரீல்ஸ்’கள் மூலமாக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பத் தவெக அரசு முயல்வதாகக் காரசாரமாகச் சாடப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் நிஜப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், வெறும் சமூக வலைதள விளம்பரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்த ‘ரீல்’ ஆட்சியை உடனடியாக நிறுத்திவிட்டு, மக்களுக்குத் தேவையான ‘ரியல்’ நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி கூட்டத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணி நிறைவேற்றியுள்ள இந்த அதிரடி தீர்மானம் தமிழக அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
