“பதவி ஆசை பிடித்து, நன்றி உணர்ச்சியே இல்லாமல் ஒரே இரவில் அணிமாறிய காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான கண்டனங்கள்” எனச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, கடந்த காலங்களில் தங்களுக்குச் செய்த துரோகத்தைப் போலவே, பதவிக்காகத் தங்களுக்குப் புதியதாகப் புகலிடம் கொடுத்த கூட்டாளிகளுக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் அதே துரோகத்தைச் செய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நன்றி கூடச் சொல்லாமல் விலகிச் சென்றதன் மூலம், இந்தியாவின் பழம்பெரும் பேரியக்கமான காங்கிரஸ், அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூடக் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு அதன் மூளை மழுங்கிப் போய்விட்டதாகக் காரசாரமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாங்கள் பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் ‘அறிவாளிகள்’ தான் காங்கிரஸ் கட்சியினர் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ள திமுக இளைஞரணி, அக்கட்சியின் இந்தத் துரோகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தங்களது தீர்மானத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
