இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் அவரது ரன் பசி மட்டுமல்ல, அவரது தனித்துவமான ‘மனநிலை’ தான் என்று இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானே புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்துப் பேசிய ரஹானே, “வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விராட் கோலியைத் திமிர்பிடித்தவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் எப்போதும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே இருப்பார். அவரது மகத்துவத்தின் மையமே ஒருபோதும் விட்டுக்கொடுக்காத அந்தப் போராட்டக் குணம்தான். கோலியைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது போதாது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கோலி ஒரு தனி உலகத்திற்குள் சென்றுவிடுவார் என்ற சுவாரசியமான தகவலை ரஹானே பகிர்ந்துள்ளார். “போட்டிக்கு முந்தைய இரண்டு நாட்களில் அவர் சக வீரர்களிடம் கூட அதிகம் பேச மாட்டார். எப்போதும் ஏர்போட் அணிந்து கொண்டு தனக்குத் தேவையான இசையைக் கேட்டபடி மௌனமாக இருப்பார்.
இது ஈகோவோ அல்லது தலைக்கனமோ கிடையாது; தன்னைத் தானே போட்டிக்குத் தயார்படுத்திக் கொள்ளும் விதம். ஆரம்பத்தில் எங்களுக்கு இது புரியவில்லை, ஆனால் பின்னர் தான் இது அவர் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தும் முறை என்பதை உணர்ந்தோம்,” என்றார் ரஹானே. தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, ஒருநாள் போட்டிகளில் அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறார். அவரது சமீபத்திய ஆட்டங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 135, 102 மற்றும் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் என வானவேடிக்கை காட்டியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளிலும் ஆந்திராவுக்கு எதிராக 131 ரன்களும், குஜராத்துக்கு எதிராக 77 ரன்களும் குவித்து தனது ரன் வேட்டையைத் தொடர்ந்து வருகிறார்.
எல்லாவற்றையும் சாதித்த பின்னரும், “அணிக்கு இன்னும் என்ன செய்ய முடியும்?” என்று கோலி சிந்திக்கும் விதம் அற்புதமான பணி நெறிமுறைஎன்று ரஹானே பாராட்டியுள்ளார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலியின் ஆதிக்கத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
