இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தபோது தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறுகடை உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் இந்த நிதி உதவி குறித்து ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பிரதம மந்திரி தெருவோர வியாபாரியின் ஆத்ம நிருப நிதி திட்டம் மூலமாக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களுக்கு மூன்று தவணையாக 50000 வரை கடன் வழங்கப்படும். வியாபாரிகள் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினால் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு 1200 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் செயல் திறனை மேலும் அதிகரிக்க UPI உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள வியாபாரிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கடன் வழங்கும் வங்கியிடம் சமர்ப்பித்து நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.