ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் ‘வேப்பிங்’ (Vaping) செய்த வீடியோ வெளியாகி பிசிசிஐ கண்டனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது சஹால் விமானத்தில் பயணம் செய்யும் போது மின்னணு சிகரெட் (E-Cigarette) பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.

பஞ்சாப் அணி வீரர்கள் ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்த போது, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் எடுத்த ‘வ்லாக்’ (Vlog) வீடியோவில், சஹால் சன்னல் ஓரம் அமர்ந்து வேப்பிங் செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடமான விமானத்தில் சஹால் இவ்வாறு செய்தது விதிகளுக்கு எதிரானது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அர்ஷ்தீப் சிங் அந்த வீடியோவை உடனடியாக நீக்கிய போதிலும், அதன் கிளிப்பிங்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஹால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.