இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தொடர்பாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் அலஸ்டர் குக் மற்றும் கெவின் பீட்டர்சன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல், ஐபிஎல் தொடரில் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை விட, இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் அதிக அனுபவம் கிடைக்கும் என்று அலஸ்டர் குக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன், “ஐபிஎல் தொடரில் விளையாடாவிட்டாலும் ஜாம்பவான்களுடன் இருப்பது பெரிய பாடத்தைக் கொடுக்கும். ஐபிஎல்-லில் விளையாடாத குக்கிற்கு இதன் மதிப்பு தெரியாது” என விமர்சித்திருந்தார்.

பீட்டர்சனின் விமர்சனம் குறித்து தற்போது மௌனம் கலைத்துள்ள அலஸ்டர் குக் கூறுகையில், “நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இருப்பது ஒரு வீரருக்குப் பல நன்மைகளைத் தரும். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வீரர் களமிறங்கி விளையாட வேண்டும். வெறும் பயிற்சியும், வேடிக்கை பார்ப்பதும் மட்டுமே ஒரு வீரரை உருவாக்கிவிடாது. நான் எனது கருத்தைச் சொன்னேன். இப்போது பெத்தெல் சில போட்டிகளில் விளையாடி வருவது மகிழ்ச்சி” என்றார்.

மேலும் ஐபிஎல் குறித்துப் பேசிய அவர், “யாரும் ஐபிஎல் தொடரை பகிரங்கமாகத் தரம் தாழ்ந்து பேச மாட்டார்கள். ஏனெனில், மீண்டும் ஒப்பந்தம் கிடைக்காது என்ற அச்சம் அல்லது உரிமையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்ற எண்ணம் இருக்கலாம். இதில் இருவரது வாதங்களிலும் நியாயம் இருக்கலாம் என்பதே எனது கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.