விபத்து ஏற்பட்ட உடனேயே, உரிய விசாரணை இன்றி அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) பறிமுதல் செய்வது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பெருமாள் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் சரண்ராஜ் ஆகியோர், தங்களது ஓட்டுநர் உரிமங்களை போலீசார் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் பறிமுதல் செய்ததாகக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் மனுக்களில், தாங்கள் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளானபோது, போலீசார், எந்தவித விசாரணையும் இன்றி தங்களது அசல் ஓட்டுநர் உரிமங்களைப் பறிமுதல் செய்து, பின்னர் அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்தனர். மேலும், தங்களது வாழ்வாதாரமே ஓட்டுநர் உரிமம் என்பதால், அதைத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மோட்டார் வாகனச் சட்டம் – 1988 தொடர்பாக முக்கிய விளக்கங்களை அளித்தார். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவோ அல்லது பறிமுதல் செய்யவோ வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ) மட்டுமே அதிகாரம் கொண்டவர் என்றும், அதற்கு முன் சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் உரிய விசாரணை நடத்தி, அவரிடமிருந்து விளக்கம் பெறுவது கட்டாயம் என்றும் நீதிபதி கூறினார்.
விபத்து நடந்த உடனேயே, எந்தவித விசாரணையும் இன்றி போலீசார் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்வது சட்டப்படி செல்லாது என்றும், இது முற்றிலும் விதிமீறல் என்றும் நீதிபதி கடுமையாக சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, மனுதாரர்களான அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பெருமாள் மற்றும் சரண்ராஜ் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசல் ஓட்டுநர் உரிமங்களை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
