தர்மபுரி மாவட்டம் குண்டலபட்டியில் தங்கும் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை மதிக்கோன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மகாலட்சுமி கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ரமேஷ் குமார் மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ரமேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடத்தவும், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தாய் சாந்தியை பார்ப்பதற்கும் ரமேஷ் குமார் கடந்த 23-ஆம் தேதி பரோலில் வந்துள்ளார்.

பின்னர் ரமேஷ் குமார் தனது மனைவியுடன் குண்டலபட்டி பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அவர் சிறையில் இருந்த போது மகாலட்சுமி அடிக்கடி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசியதாக ரமேஷ் குமாருக்கு யாரோ கூறியுள்ளனர்.

அதனை வைத்து ரமேஷ் குமார் தனது மனைவியிடம் விடுதியில் வைத்து சண்டை போட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் மகாலட்சுமியின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ரமேஷ் குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.