நெதர்லாந்தைச் சேர்ந்த தாமஸ் டி. வுல்ஃப் என்ற பொறியாளர், தனது செல்லப் பிராணி தங்கமீனான ‘ப்ளாப்’ மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மீன் ஒரு நிமிடத்தில் மனிதத் தலையீடின்றி ஒரு வாகனத்தை ஓட்டி அதிக தூரம் பயணித்ததற்காக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இதற்காக தாமஸ் ஒரு பிரத்யேக நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார். அந்த வாகனத்தில் உள்ள கேமராக்கள், தண்ணீர் தொட்டிக்குள் மீன் நகரும் திசையைக் கண்டறிந்து, அதற்கேற்ப காரைச் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தத் தங்கமீன் சுமார் 40 அடி தூரம் பயணித்து அசத்தியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு வெறும் வேடிக்கைக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல; இது எதிர்காலத்தில் உடல் ஊனமுற்றோருக்கான வாகனத் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைகளில் இயக்கக் குறைபாடு உள்ளவர்கள் கூட, தங்களின் சிறு அசைவுகள் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று தாமஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில், தனது மீன் உலக சாதனை படைத்த விஷயத்தை அதற்கு எப்படி புரிய வைப்பது என்று தாமஸ் நகைச்சுவையாகக் கூறியது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.