திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலில் குதித்த நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் அவர், ஆளும் திமுக அரசை “தீய சக்தி” என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. இருப்பினும், தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறி அது ஆளும் கட்சிக்கே சாதகமாக முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் ஒருபுறம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், இயக்குனர் ராஜகுமாரன் ஒரு நேர்காணலில் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்றும், ஒரு தொகுதியில் அவரால் பத்தாயிரம் வாக்குகளைக் கூட வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது சமுதாய மக்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும், பழைய கட்சிக்காரர்கள் எப்போதும் தங்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் அவர் வாதிட்டுள்ளார். விஜய்யின் வருகை தமிழக அரசியலில் தேவையற்ற குழப்பத்தையும் ஓட்டுச் சிதறலையும் மட்டுமே ஏற்படுத்தும் என்பது ராஜகுமாரனின் கருத்தாக உள்ளது.
