தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுப்பிய சில வினாக்கள் மிகவும் நியாயமானவை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், மாநில அரசால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் ‘நீட் விலக்கு’ குறித்து வாக்குறுதி அளித்தது ஏன்?, பெண்களுக்கு 100 ரூபாய் சிலிண்டர் மானியம் மற்றும் கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் என்னவானது? என விஜய் கேட்ட கேள்விகள் சரியானவை என்று குறிப்பிட்டார்.
அதே சமயம், டெல்லி அணி – சென்னை அணி என விஜய் விளையாட்டாகக் குறிப்பிட்டதை அரசியலாகப் பார்க்காமல் விளையாட்டாகவே கடந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளில் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டிய தமிழிசை, தொண்டர்கள் வெயிலில் கஷ்டப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டதற்குத் தனது வரவேற்பைத் தெரிவித்தார்.
அதே வேளையில், கட்சித் தலைவரின் வாகனத்திற்குப் பின்னால் அதிவேகமாகச் சென்று விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ஆள வருவதற்கு முன்பாக தனது கட்சியினரைக் கட்டுப்படுத்தி விஜய் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தமிழகம் உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமானால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்தினார்.
