தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப். 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் அரசியல் நிலைமைகள் குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தினகரன் பதிலளிக்கையில், “அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலில் எதுவும் நடக்கலாம். அவருடன் கூட்டணி கூட வைக்கலாம். அவர் ஒன்றும் தீண்டத்தகாதவர் அல்ல. அரசியலில் நீண்ட கால அனுபவம் மட்டுமே முக்கியம் இல்லை. மக்களின் ஆதரவு, நம்பிக்கை என்பவையே முக்கியம்” என கூறினார். தினகரனின் இந்தக் கருத்து, விஜய் தலைமையிலான கட்சியுடன் அரசியல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.