மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வராகும் ஆசை, கனவு எனக்கு எப்போதும் கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டு முறை மத்திய கேபினட் அமைச்சர் வாய்ப்பை வழங்கியும் தான் ஏற்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவே தான் போராடியதாக அவர் கூறினார்.

மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகார வரம்பை மீறிப் பேசுவதாகவும், அவரது உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் வைகோ விமர்சித்தார். அரசியல் நிலவரம் குறித்து பேசிய வைகோ, தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க முயற்சி நடப்பதாகவும், பாஜக எதிர்கட்சிகளை நசுக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்றும், மத்திய அமைச்சர் அமித் ஷா கட்சிகளை விமர்சனம் செய்யும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து இந்தியாவைத் துண்டாடப் பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், வாக்காளர் பட்டியல் நீக்கம் மற்றும் வெளிமாநில வாக்காளர் சேர்க்கை ஆகியவை மோசடித் திட்டம் என்றும் குறிப்பிட்டார்.

புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், “விஜய்யின் கனவு நினைவாகாது. அவர் காகிதக் கப்பலில் கடலில் கடக்க முயல்கிறார், அவர் கட்டும் மணல் கோட்டை வெறும் மண் கோட்டையாகவே போகும்” என்று கடுமையாக விமர்சித்தார்.