கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தவிர்க்க, இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சித் தலைவர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

செல்போன் பயன்படுத்தக் கூடாது, இருக்கையை விட்டு எழக்கூடாது எனப் பல நிபந்தனைகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சி தொடங்கியபோது அனைத்தும் திட்டமிட்டபடி அமைதியாகவே சென்றது. மேடையில் அமர்ந்திருந்த விஜய், இஸ்லாமிய முறைப்படி தொழுகையில் ஈடுபட்டார். ஆனால், அவர் கிளம்பும் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. விஜய்யைப் பார்ப்பதற்காகப் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி முண்டியடித்தனர்.

குறிப்பாக, பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர் வராததால் அங்கும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிர்வாகிகள் முயன்றபோதும், சில முக்கியப் பொறுப்பாளர்களே விதிகளை மீறி விஜய்யைச் சந்திக்க முயன்றது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே கரூரில் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பான விமர்சனங்கள் ஓய்வதற்குள், முறையான திட்டமிடல் இருந்தும் மீண்டும் இப்தார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த குளறுபடிகள் விஜய் தரப்புக்கு புதிய சங்கடத்தை உருவாக்கியுள்ளன.