தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பானது என்றாலும், தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தற்போது யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரைநூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் போன்றோர் திமுகவில் இணைந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது மிகப்பெரிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது.சேலம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலையைத் தங்கள் பக்கம் இழுக்க அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

வன்னியர் சமூகத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட செம்மலை திமுகவிற்கு வந்தால், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பது திமுகவின் கணக்காக இருந்தது. இதற்காகப் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், இது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க மறுத்த செம்மலைக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த முறையும் தனக்கு விருப்பமான தொகுதி கிடைக்காது எனக் கருதி அவர் விருப்ப மனு அளிக்காமல் இருந்ததால், அவர் திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்திகள் பரவின. இருப்பினும், அதிமுக தலைமை மீது அதிருப்தி இருந்தாலும் கட்சியிலிருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த செம்மலை, தான் திமுகவில் இணையப்போவதாக வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.