தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதை அடுத்து, தமிழக மக்களுக்கு ஒரு எழுச்சியூட்டும் கடிதத்தை எழுதியுள்ளார். இந்தச் சின்னம் சாதாரண மக்களின் கொண்டாட்டத்தோடும், மகிழ்ச்சியோடும் இணைந்தது என்றும், இது மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தனது நோக்கம் என்று கூறியுள்ள அவர், தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த முதல் வெற்றியை வெற்றிகரமான அரசியல் பயணத்திற்கான ‘தெய்வீக முன்னறிவிப்பு’ என்று வர்ணித்துள்ளார்.
இதனால் விஜய் தனது கடிதத்தில், “விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளதுடன், தமிழகத்தின் அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார். மற்ற கட்சிகள் தங்களைப் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்று விமர்சிப்பதைக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு ஊழல் செய்வதில் அனுபவம் இல்லை என்றும், நேர்மையான பாதையில் மக்கள் நலனுக்காக உழைக்கத் தயார் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விசில் சத்தம் தமிழகம் முழுவதும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், திராவிட மற்றும் இதர கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழும் என்றும் தனது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அவர் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
