கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், சிபிஐ (CBI) தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தமிழக காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் (DSP) சண்முக சுந்தரம் உட்பட நான்கு பேருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ தனது அறிக்கையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த டிஎஸ்பி சண்முக சுந்தரம், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். “உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கினால், இந்த முக்கிய வழக்கின் விசாரணை முற்றிலும் பாதிக்கப்படும்” என்று அவர்கள் வாதிட்டனர். சிபிஐ-யின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டிஎஸ்பி சண்முக சுந்தரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டது.
