ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 156 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (32 ரன்கள்) மற்றும் விராட் கோலி ஜோடி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது.

இடையில் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், குருணால் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளை ரஷித் கான் அடுத்தடுத்து வீழ்த்தி குஜராத் அணிக்கு நம்பிக்கையளித்தார். இருப்பினும், மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோலி 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 18 ஓவர்களிலேயே ஆர்சிபி அணியை 161 ரன்கள் எடுக்க வைத்து வெற்றியை உறுதி செய்தார்.

 

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை விட, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அசிஷ் நெஹ்ரா குறித்த சுவாரசியமான விவாதம் தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயரும், விராட் கோலியும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்த அந்தப் பதற்றமான சூழ்நிலையிலும், குஜராத் அணியின் ‘டக்அவுட்’ பகுதியில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் நெஹ்ரா மிகவும் நிதானமாகத் தனது நகங்களை வெட்டிக்கொண்டிருந்தார்.

போட்டி இவ்வளவு விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் போது, மைதானத்தில் நெஹ்ரா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வேடிக்கையை ஏற்படுத்தி வருகிறது.