ஈக்வடார் நாட்டில் நடைபெற்ற இரண்டாம் பிரிவு கால்பந்து போட்டியின் போது, மைதானத்திற்குள் வந்த மருத்துவ அவசர உதவி வண்டி எதிர்பாராதவிதமாக மற்றொரு வீரர் மீது மோதிய விசித்திரமான சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘லிகாப்ரோ சீரி பி’ கால்பந்து தொடரில் எல் நேஷனல் மற்றும் எல்.டி.யு. போர்டோவியேஜோ ஆகிய அணிகள் மோதின. போட்டியின் 72-வது நிமிடத்தில், ஏற்கனவே காயமடைந்த ஒரு வீரரை ஏற்றிக்கொண்டு மருத்துவ வண்டி மைதானத்திற்கு வெளியே சென்றுகொண்டிருந்தது.
அப்போது போர்டோவியேஜோ அணியின் வீரரான எடிசன் கைசிடோ கவனக்குறைவாகத் திரும்பி நடந்தபோது அந்த வண்டியின் மீது மோதி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். விழுந்த வேகத்தில் வலியால் துடித்த அவர், சில அடிகள் தவழ்ந்து சென்று மீண்டும் தரையில் உருண்டு பிரண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அணி வீரர்கள் மற்றும் சக வீரரான டுவார்டே, உடனடியாக ஓடிவந்து வண்டியின் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நடுவரிடமும் முறையிட்டனர்.
🚑❌A Edison Caicedo jugador de Liga de Portoviejo lo atropelló el carrito de asistencia médica en pleno partido ante El Nacional.
Salió el blooper de la semana en la Serie B de Ecuador ⚽️🇪🇨
📽️Zapping Sports pic.twitter.com/giwTKq9uUp
— Bryan Diaz Sports (@bryandiazec18) May 31, 2026
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும், கால்பந்து ரசிகர்கள் பலரும் கைசிடோவின் இந்தச் செயலைத் தீவிரமாகக் கிண்டல் செய்து வருகின்றனர். வண்டி ஓட்டுநருக்கு நடுவர் ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே கைசிடோ திட்டமிட்டு அந்த வண்டியின் மீது போய் மோதியது போல நடிப்பதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“வண்டி அவர் மீது ஏறியதாகக் கூறுகிறார்கள், ஆனால் மீண்டும் மைதானத்திற்குள் உருண்டு வருவதற்கு மட்டும் அவருக்குத் தெம்பு இருக்கிறது” என்று ரசிகர்கள் எக்ஸ் (X) மற்றும் ரெடிட் தளங்களில் விமர்சித்துள்ளனர். இந்த விசித்திரமான பரபரப்புகளுக்கு இடையே, போட்டியின் 30-வது நிமிடத்தில் ஜுவான் கமிலோ அடித்த கோலின் உதவியோடு போர்டோவியேஜோ அணி 1-0 என்ற கணக்கில் எல் நேஷனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
