ஐபிஎல் 2026 தொடரின் 41-வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 29) மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், இன்றைய போட்டியில் மும்பை அணி கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள மும்பை ரசிகர்களுக்கு, காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா இன்றைய பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.​மறுபுறம், பேட் கம்மின்ஸ் தலைமையில் அபாரமாகச் செயல்பட்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் வலுவாக உள்ளது.

குறிப்பாக, பேட் கம்மின்ஸின் வருகைக்குப் பிறகு அந்த அணியின் பந்துவீச்சு பல மடங்கு வலுப்பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடித் தொடக்கம் மும்பை பவுலர்களுக்குக் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்பதால், இன்றைய ஆட்டத்தில் ரன் மழை பொழியும் என்பதில் சந்தேகமில்லை.