கேரளா பத்தனம்திட்டா அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரை வீட்டிற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போன் பறித்து, பின்னர் அவரது மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்து சித்ரவதை செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் (29), அவரது மனைவி ரஷ்மி (23). ரஷ்மிக்கு ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், “உல்லாசமாக இருக்கலாம்” என சொல்லி, கடந்த 1-ந்தேதி ரஷ்மி அந்த வாலிபரை வீட்டிற்கு வரச் சொன்னதாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் வந்த வாலிபரை, முதலில் நெருங்க அழைத்த ரஷ்மி, பின்னர் கணவர் ஜெயேஷ் வருவதை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது வீட்டில் மறைந்திருந்த ஜெயேஷ், இருவரையும் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதையடுத்து தம்பதிகள், வாலிபரை பிடித்து, அவரிடம் இருந்த ரூ.6,000 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துள்ளனர். பின்னர், அவரை கட்டிவைத்து மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’ களை அடித்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். மேலும், கை விரல் நகங்களையும் பிடுங்கியதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் வாலிபர் அலறிய நிலையில், அவரது வாயை துணியால் கட்டிய பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கொண்டு சென்று விட்டு தப்பி ஓடியுள்ளனர். வழியே சென்ற ஒருவர் அவரது குரல் கேட்டு மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
தகவல் தெரிந்ததும் ஆரன்மூளா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயேஷ் மற்றும் ரஷ்மி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இதே மாதிரியான முறையில் ரஷ்மி, ஓணப் பொழுதன்று மற்றொரு வாலிபரையும் சிக்கவைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. அவரும் ரான்னியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆரன்மூளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
