ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தரைவழியாக ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாக (Ground Invasion) வெளியாகும் தகவல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “நாங்கள் அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்; எங்களைத் தாக்க வருபவர்களுக்கு ஈரான் ஒரு புதைகுழியாக மாறுவதை எங்கள் படைகள் உறுதி செய்யும்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
NBC ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், அமெரிக்க நிர்வாகம் நேர்மையற்ற முறையில் செயல்படுவதால், அவர்களுடன் இனி எந்தவொரு போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கடந்த முறை இஸ்ரேல் நடத்திய 12 நாள் போரின் போதும் ஈரான் அடிபணியவில்லை என்றும், இறுதியில் இஸ்ரேலே நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தைக் கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்கா தாக்குதல்களை நடத்துவதால், வாஷிங்டன் நிர்வாகத்தின் மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லை என அரக்சி சாடியுள்ளார்.
“பூட்ஸ் ஆன் தி கிரவுண்ட்” (Boots on the ground) என அழைக்கப்படும் தரைப்படை நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரானியப் படைகள் நீண்டகாலமாக இத்தகைய சூழலை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும், அமெரிக்காவிற்கு இது ஒரு மிகப்பெரிய தோல்வியாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வான்வழித் தாக்குதல்களைத் தாண்டி, தற்போது தரைவழிப் போருக்கான அறிகுறிகள் தென்படுவது உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
