திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு, தற்போது 300 மடங்கு வரை வரி உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். அதேபோல், மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு, இப்போது பலமுறை உயர்த்தி ஷாக் கொடுத்துள்ளார்கள்” என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

​மேலும், மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை கொண்டு வரப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, இன்று வரை அதை அமல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடினார். திமுக அரசு செய்த தவறுகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், வரும் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு திமுக அரசுக்கு எதிராகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.