2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை வீழ்த்தி தனது பயணத்தை முடித்திருந்தாலும், அதற்குமுன் தொடர்ச்சியாக சந்தித்த 4 தோல்விகளால் லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த மோசமான செயல்பாட்டிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குப் பதிலாக சமையல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று முன்னாள் ஆடவர் அணி கேப்டன் ஷாகித் அப்ரிடி முன்பு கூறியிருந்த சர்ச்சைக்குரிய கருத்தே இந்த வெறுப்பு மனநிலைக்குக் காரணம் என சனா மிர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது பெண் வீராங்கனைகளுக்கு சம உரிமை அளிக்கும் வரை அந்நாட்டு ஆடவர் அணியினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்த முன்னுதாரணத்தை சனா மிர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஆடவர் அணி தோற்கும்போது யாரும் அவர்களை ‘தந்தூரியில் ரொட்டி சுடப் போங்கள்’ என்று விமர்சிப்பதில்லை எனக் குறிப்பிட்ட அவர், வீராங்கனைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் குறிவைத்து ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவது அச்சுறுத்தலாக உள்ளது என எச்சரித்துள்ளார். பல ஆண்டுகள் போராடி இந்தியாவை வீழ்த்தியது, தங்கப் பதக்கங்களை வென்றது போன்ற சாதனைகளைப் படைத்த பிறகும், பெண்களைக் குறைத்து மதிப்பிடும் இந்த சமூக மனநிலை மாறாதவரை முன்னேற்றம் சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.