”மக்களை ஏமாற்றிப் போலியான வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை, தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே காலை உணவுத் திட்டத்தைத் தந்தவர் தளபதி ஸ்டாலின்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை நேர்மை குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு ஒரு நன்மையைச் செய்ய முடியும் என்றால், அதைத் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாமல் கூடச் செய்யலாம் என்பதற்குத் தளபதி ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டமே மிகச்சிறந்த உதாரணம் என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவிற்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்று நன்றாகத் தெரியும் என்றும், புதிய அரசு செயல்படத் தங்களுக்கு அவகாசம் தருவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார். அதே நேரத்தில் மக்கள் நலனில் தவறு இருந்தால் அதற்காகப் போராடவும், அதைச் சுட்டிக்காட்டவும் எந்தக் காலத்திலும் திமுக தவறாது என்று எச்சரித்த அவர், தமிழ்நாட்டில் தன் திட்டங்கள் போய்சேராத ஒரு குடும்பம் கூட இல்லை என்று சொல்லக்கூடிய பெருமை மிகுந்த ஆட்சியைத்தான் அண்ணன் தளபதி நடத்திக் காட்டினார் என்று தவெக அரசுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
