“100 யூனிட் இலவச மின்சாரத்தின் ஆரிஜின் எது தெரியுமா?” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் இலவச மின்சாரத் திட்டத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய்க்கு அதிரடி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், 100 யூனிட் இலவச மின்சாரத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் கொண்டு வந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள எழிலன், கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியதில் இருந்துதான் தமிழ்நாட்டில் இலவச மின்சாரத் திட்டமே பிறந்தது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், தவெக அரசு தற்போது அறிவித்திருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக எழிலன் குற்றம் சாட்டினார். இரண்டு மாதங்களுக்கு மின்சாரப் பயன்பாடு 500 யூனிட்டைத் தாண்டினால் இந்தச் சலுகை கிடையாது என்ற தவெக அரசின் விதிமுறையைச் சாடிய அவர், நகர்ப்புறங்களில் ஒரு ஏசி இருந்தாலே எளிதாக 500 யூனிட் தாண்டிவிடும் என்றார். இதனால், கொடுப்பது போல கொடுத்துவிட்டுப் பிடுங்குவது தான் உங்களின் மாற்றத்துக்கான ஆட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ள எழிலனின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
