பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
நேரில் ஆஜரான புனீத், தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி தனது அடையாள அட்டைகளைக் காட்டினார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், புனீத்தின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்தை மாற்றி, மர்ம நபர்கள் போலியாக ஒரு அட்டையைத் தயாரித்து சிம் கார்டு வாங்கியது தெரியவந்தது.
தனது ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து புனீத் தற்போது புகார் அளித்துள்ளார். பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
