நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) மென்பொருள் நிறுவனத்தில் நடந்த மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி நிதா கான், 42 நாட்களுக்குப் பிறகு சத்ரபதி சம்பாஜிநகரில் கைது செய்யப்பட்டார்.
நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்தல் மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற புகார்கள் எழுந்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே ரசா ரபீக் மேமன், தௌசீப் பிலால் அத்தார், தனிஷ் ஷேக் மற்றும் ஷாரூக் உசேன் சௌகத் குரேஷி ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நிதா கான், கடந்த 42 நாட்களாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். நாசிக் குற்றப்பிரிவு மற்றும் சத்ரபதி சம்பாஜிநகர் போலீஸார் இணைந்து நடத்திய ரகசிய தேடுதல் வேட்டையில், நரேகாவ் பகுதியில் வைத்து அவர் சுற்றி வளைக்கப்பட்டார். கைது செய்வதற்கு முன்பாக இரண்டு நாட்கள் அவர் தங்கியிருந்த வீட்டை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நிதா கான் கைது செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் (UPT), அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் நாசிக் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். தான் கர்ப்பிணியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ஜாமீன் கோரிய போதிலும், நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.
நிதா கான் கர்ப்பிணியாக இருப்பதால், அவரை கையாளுவதில் போலீஸார் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்தத் தகவல்கள் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரக் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
