புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988 விதியின் 146 இன் படி பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் 100 சதவீதம் மூன்றாம் நபர் காப்பீட்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கள ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கள ஆய்வில் முதல் முறை சிக்கினால் ரூ 2000 அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையும் அடுத்தடுத்த முறை சிக்கினால் நான்காயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.