கர்ப்பிணிப் பெண்கள் விபத்தில் உயிரிழக்கும்போது, அவர்களின் வயிற்றில் இருக்கும் ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட கருவையும் சட்டப்படி ஒரு ‘நபராகக்’ கருதி தனி இழப்பீடு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ரயில் விபத்தில் உயிரிழந்த 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் வழக்கை விசாரித்த நீதிபதி பிரஷாந்த் குமார், “ஐந்து மாதங்களுக்கு மேலான கரு என்பது ஒரு சுதந்திரமான உயிர்; அதன் மரணத்தைப் புறக்கணிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரயில்வே தீர்ப்பாயம் பெண்ணின் மரணத்திற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிவிட்டு, கருவிற்கு இழப்பீடு வழங்க மறுத்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றம் அந்த உத்தரவைத் திருத்தி சிசுவிற்கும் தனி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே சட்டத்தின் கீழ் விபத்தில் ஏற்படும் அனைத்து உயிரிழப்புகளுக்கும் அதிகாரிகளே பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இனி வரும் காலங்களில் கருவில் இருக்கும் குழந்தையின் உயிரிழப்பையும் ஒரு தனி இழப்பாகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு விபத்துகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருப்பதோடு, பிறக்காத குழந்தைகளின் உரிமைகளைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட கரு ஒரு தனி மனிதராகக் கருதப்படும் என்ற இந்த புதிய விதிமுறை, எதிர்காலத்தில் விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
