வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நடப்பு 2023 – 24 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஐடிஆர் படிவம் ஒன்று மற்றும் ஐடிஆர் படிவம் 4ல் பல மாற்றங்களை வருமானவரித்துறை செய்தது. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் பற்றி கட்டாயமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நிதியாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் இந்த படிவத்தை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. ஐடிஆர் படிவத்தை நிரப்புவதற்கான கடைசி தேதி ஜூலை 31 2024 ஆகும். அதாவது ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கடு முடியும் ஏழு மாதத்திற்கு முன்பே இந்த படிவங்களை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த முறை மாற்றங்கள் காரணமாக, பிரிவு 115BAC மாற்றப்பட்டுள்ளது. புதிய வரி முறையானது தனிநபர், HUF, AOP, BOI மற்றும் AJP ஆகியவற்றுக்கான இயல்புநிலை விருப்பமாகும். மேலும், புதிய வரி விதிப்பைத் தேர்வு செய்ய விரும்பாதவர்கள் அதிலிருந்து விலக வேண்டும். அவர்கள் பழைய வரி முறையை தேர்வு செய்யலாம். இது தவிர, இம்முறை வெளியிடப்பட்ட ITR படிவம் 1 மற்றும் 4இன் புதிய பதிப்பில் பிரிவு 80CCH-இன் கீழ் புகாரளிக்க தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு 80CCH நிதிச் சட்டம் 2023 மூலம் சேர்க்கப்பட்டது. மேலும், இனிமேல் வரி செலுத்துவோர் தங்களின் அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் ஆண்டுக்கான பணப் பரிவர்த்தனைகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க வேண்டும்.