மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்கத் தயாரிப்பான F-35 ஸ்டீல்த் போர் விமானம், வான்வழித் தாக்குதலில் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி தனது முதல் ‘ஏர்-டு-ஏர் கில்’ (Air-to-Air Kill) சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் வான்பரப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேல் விமானப்படை (IAF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் டோமர் பார், அந்த விமானிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் ஆடியோவையும் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். “தெஹ்ரான் வான்பரப்பில் நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்றுச் சாதனை நமது வலிமையின் அடையாளம். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன், அடுத்த பணிக்காகக் காத்திருங்கள்” என அவர் அந்த விமானியை ஊக்கப்படுத்தியுள்ளார்.
வீழ்த்தப்பட்ட ஈரானின் யாக்-130 விமானம் என்பது அடிப்படையில் ஒரு பயிற்சி மற்றும் இலகுரகத் தாக்குதல் விமானமாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட F-35 விமானத்திற்கு இது எந்த வகையிலும் ஈடு இணையானது கிடையாது. இதற்கிடையே, வான்பரப்பில் நிலவும் குழப்பத்தால் குவைத் நாட்டின் போர் விமானம் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று F-15E போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ‘பிரண்ட்லி ஃபயர்’ (Friendly Fire) சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மறுபுறம், ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் ஜெருசலேமில் அபாயச் சங்குகள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. லெபனானில் இருந்தும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் ஒரு பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
