மருத்துவமனையின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சையினால் 11 மாதக் பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், 4 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் மீது புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புனே நவி பேத் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை ஹனுமந்த் தத்தாராவ் கிதே (34), சககார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், 11 மாதக் குழந்தையான அதிதிக்குத் தொடர் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நவி பேத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சையின் போது மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் அலட்சியத்துடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்தும் முறையான சிகிச்சை அளிக்காமல், தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிரிழந்ததாகத் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சசூன் அரசு மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழு விரிவான விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், சிகிச்சையில் கடுமையான குறைபாடுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையின் அஜாக்கிரதையே குழந்தையின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என நிபுணர் குழு முடிவெடுத்தது. மருத்துவக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மருத்துவத் தொழில் சட்டம் 2023-இன் கீழ் பின்வருவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் முகுந்த் சங்கம்னர்க்கர், , டாக்டர் கணேஷ் ஆரேகர், டாக்டர் ஸ்ரீதர் ஜாதவ், டாக்டர் ராதா சங்கம்னர்க்கர், செவிலியர் மனிஷா ஷிண்டே, செவிலியர் சாரிகா சுதார்

இந்த வழக்கை உதவி ஆய்வாளர் காலே தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புனே மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.