இந்திய ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் குறித்துப் பெரிய கேள்விக் குறியை எழுப்பும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் சில வேடிக்கையாக இருந்தாலும், சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகியுள்ள இந்த வீடியோ, ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

வைரலாகியுள்ள அந்த வீடியோவில், ரயில் பெட்டியின் உள்ளே கழிவறைக்கு (Toilet) அருகிலுள்ள நடைபாதையில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். பயணிகள் நடமாடும் அந்த அசுத்தமான தரையில் அமர்ந்து கொண்டு, அவர் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே ஒரு பாத்திரம் மற்றும் பிளாஸ்டிக் ஷீட் பரப்பப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அவர் ரயில்களில் ‘ஜால்முரி’ (சுண்டல்/மசாலா பொருட்கள்) விற்கும் வியாபாரி போலத் தெரிகிறது. பயணிகள் கால் வைக்கக்கூடத் தயங்கும் கழிவறைக்கு மிக அருகிலுள்ள இடத்தில், பொதுமக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தயாரிப்பது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கழிவறைக்கு அருகிலுள்ள பகுதிகள் கிருமிகள் அதிகம் நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. அத்தகைய அசுத்தமான சூழலில் உணவுப் பொருட்களைக் கையாளுவது ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.  இதனால் வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள் மற்றும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை (Food Poisoning) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  இது வெறும் தனிப்பட்ட ஒரு வியாபாரியின் தவறு மட்டுமல்லாது, ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீதான கண்காணிப்பு எந்த அளவில் உள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போதே அருவருப்பாக இருக்கிறது. ரயிலில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மீது எந்தவிதக் கண்காணிப்பும் இல்லையா? பயணிகளின் உயிருடன் இவர்கள் விளையாடுகிறார்கள்,” என்று சமூக வலைதளப் பயனர் ஒருவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், “இனி ரயில்களில் எதையும் வாங்கி உண்ணப் போவதில்லை” எனத் தங்களது அச்சத்தைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், பயணிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை வீட்டிலிருந்தே உணவைக் கொண்டு வருவது அல்லது அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்குவது சிறந்தது.

மேலும் நடைபாதைகளில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் திறந்தநிலை உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சுகாதாரமற்ற விற்பனையாளர்களைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.