மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில், 19 வயதான சந்தியா சூராஜ் கெய்க்வாட் என்ற இளம்பெண்ணுக்குச் செய்யப்பட்ட சிசேரியன் பிரசவத்தின் போது, மருத்துவர்கள் காட்டிய பேராபத்தான அலட்சியம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரசவம் முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சில நாட்களிலேயே, அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

​வலியால் துடித்த அந்தப் பெண்ணை உடனடியாக புனேவில் உள்ள சசூன் மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்த ஆபரேஷனின் போது, முந்தைய சிசேரியனின் போது மருத்துவர்கள் தவறுதலாகப் பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே விட்டுச்சென்ற சர்ஜிகல் கிளவுஸ்கள் (மருத்துவக் கையுறைகள்) மற்றும் பேப்பர் நெப்கின்களை வெளியே எடுத்து குடும்பத்தினரிடம் காட்டியுள்ளனர்.

​தற்போது அந்த 19 வயது பெண் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். தன் மகளின் இந்த நிலைக்கு பீட் மாவட்ட அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குடும்பத்தினர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர்.

​இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பீட் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சிசேரியன் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு அதிரடியாக ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.