கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள மேப்பாடி பகுதியில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக, அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி பகுதியில் மட்டும் சுமார் 22.6 சென்டிமீட்டர் அளவுக்கு மகா மழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், அங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் இடத்தில் இந்த நிலச்சரிவு திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியே மண்ணால் மூடப்பட்டு, போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், தற்போது அங்கு போர்க்கால அடிப்படையில் தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மண்ணுக்குள் புதைந்திருந்த 3 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ள நிலையில், அங்கு வேலை பார்த்து வந்த மற்ற தொழிலாளர்கள் யாராவது மண்ணுக்குள் புதைந்துள்ளனரா என்ற கோணத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க கூடுதல் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.