வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதிலேயே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதோடு, வயது அடிப்படையிலும் அடுத்த இரண்டு உலகக் கோப்பைகளில் விளையாட தகுதி உடையவராகவே இருக்கிறார்.

இருப்பினும், பிசிசிஐ விதிகளின்படி ஒரு வீரர் தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும். இந்த விதியினால், சூர்யவன்ஷிக்கு இன்னும் வயது இருந்தும், இனி வரும் உலகக் கோப்பைப் போட்டிகளில் அவரால் விளையாட முடியாது.

இந்த முக்கியமான விதி மாற்றத்திற்கு முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஒரு முக்கிய காரணமாகும். 2016-ஆம் ஆண்டு இந்திய இளையோர் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, ஒரே வீரர் மீண்டும் மீண்டும் இளையோர் அணியில் விளையாடுவதால் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதையும், வயது மோசடி போன்ற புகார்கள் எழுவதையும் டிராவிட் கவனித்தார்.

மேலும் அவரது பரிந்துரையின் பேரில், இளையோர் கிரிக்கெட் என்பது வெறும் வெற்றிக்கானது மட்டுமல்ல, அது சீனியர் அணிக்கு வீரர்களைத் தயார் செய்யும் ஒரு தளம் என்பதை உறுதிப்படுத்த இந்த ‘ஒரு முறை மட்டுமே’ என்ற விதியை பிசிசிஐ அமல்படுத்தியது. இதன் மூலம் வைபவ் போன்ற வீரர்கள் அடுத்த கட்டமாக ரஞ்சி டிராபி மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு விரைவாக முன்னேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.