மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் ருத்ரதாண்டவ ஆட்டம் தான்.

மேலும் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துரத்தியபோது, ஸ்மிருதி வெறும் 41 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆரஞ்சுத் தொப்பியை வென்றதோடு மட்டுமல்லாமல், களத்தில் அவர் காட்டிய அதிரடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான போராட்டம் மறைந்திருப்பதை அணியின் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்கு முந்தைய இரவு ஸ்மிருதிக்கு 103°F காய்ச்சல் மற்றும் கடும் சளி பாதிப்பு இருந்திருக்கிறது. உடல்நிலை மிக மோசமாக இருந்தபோதிலும், ஒரு கேப்டனாக அணியைத் தவிக்க விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் அவர் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஒரு நொடி கூட முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “பரவாயில்லை, நான் விளையாடுகிறேன்” என்று உறுதியளித்து களத்திற்கு வந்த ஸ்மிருதியின் இந்தத் அர்ப்பணிப்பு, ஆர்.சி.பி ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.