தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வென்னலபைலு கிராமத்தை சேர்ந்த பர்சிகா ராஜு என்ற 35 வயது விவசாயி, தனது பைக்கில் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கின் மீது உயர் மின்னழுத்த கம்பி விழுந்தது. உடனே பைக்குடன் தீப்பிடித்து, அவர் மீதும் தீப்பரவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பர்சிகா ராஜுவிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது மரணம், குடும்பத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, அரசு மற்றும் மின்சார வாரியங்கள் உயர் அழுத்த கம்பிகளின் பாதுகாப்பு நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதே நாளில், தெலுங்கானாவின் மற்ற பகுதிகளான கம்மம் மற்றும் சிந்தகனி மண்டலங்களிலும் இரண்டு தனித்தனி மின்சாரம் தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவராக பி. நரேந்தர் (20) என்பவர் பம்ப் செட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மற்றொருவரான பாஸ்கர் ராவ், தனது நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஒரே நாளில் மூன்று உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது அந்த மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
