வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழுக்கள் இருந்த விவகாரத்தில், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு (IRCTC) மற்றும் சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்ததாரருக்கு மொத்தம் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 15, 2026 அன்று பாட்னாவிலிருந்து டாட்டாநகர் நோக்கிச் சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலில் (வண்டி எண்: 21896) பயணித்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளன. இது குறித்து அவர் ரயிலில் இருந்த ஊழியரிடம் தட்டிக்கேட்டபோது, அந்த ஊழியர் தயிரில் இருப்பது புழு அல்ல, அது ‘குங்குமப்பூ’ (Kesar) என்று கூறி மழுப்பியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காலாவதியான தயிர் வழங்கப்பட்டதும், அதில் புழுக்கள் நெளிவதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
The complaint regarding food quality raised by a passenger in train number 21896 (Patna – Tatanagar Vande Bharat Express) on 15 March 2026 has been taken seriously. Action taken — IRCTC has been penalised ₹10 lakh, the service provider has been penalised with ₹50 lakh, and…
— Ministry of Railways (@RailMinIndia) March 25, 2026
இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட ரயில்வே அமைச்சகம், தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவின் தரம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் IRCTC நிறுவனத்திற்கு ரூ.10 லட்சமும், உணவை வழங்கிய சேவை ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உணவின் தரமே எங்களின் முதன்மை முன்னுரிமை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த உடனடி நடவடிக்கையைப் பலரும் பாராட்டியுள்ளனர். அதே சமயம், “ஒவ்வொரு முறையும் பயணிகள் புகார் அளித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ரயில்வே நிர்வாகமே அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் வந்தே பாரத் போன்ற நாட்டின் பெருமைக்குரிய ரயில்களில் இத்தகைய தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவது வருத்தமளிப்பதாகப் பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
