மும்பை – சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சி-16 பெட்டியில் இருந்த கழிப்பறையில் சுமார் 2.5 அடி நீளமுள்ள ‘சாரைப் பாம்பு’ இருப்பதைக் கண்டு பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த கழிப்பறை பூட்டப்பட்டு, ரயில் சோலாப்பூர் சென்றடைந்ததும் பாம்பு பிடிப்பவர் மூலம் அந்தப் பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

இந்தச் செயலால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்புப் படை சுமார் 50 நாட்களுக்குப் பிறகு தற்போது குற்றவாளியைக் கைது செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாசிக்கைச் சேர்ந்த 37 வயதான ஜெகன் அர்ஜுன் பாலே என்பவரைத் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர்.

இந்நிலையில் விசாரணையில், பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற விசித்திரமான காரணத்திற்காகவே தான் ரயிலில் பாம்பை விட்டுச் சென்றதாக அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அவர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.