தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மேலும் வணிகர்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை…

  • வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினருக்கான உதவி தொகை 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • உணவுப் பொருட்கள் விற்பனை, சேமித்தல் தொழில்கள் தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும்.
  • சென்னை மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள், வணிக வளாக பிரச்சனைகளை தீர்க்க வழிகாட்டு குழுக்கள் அமைக்கப்படும்.
  • 9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர் பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
  • தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளத்தில் வர்த்தகம், சிறு வியாபாரிகளுக்கு புதிய இணையம் உருவாக்கப்படும்.
  • மக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் கடை திறக்க வழங்கப்பட்ட அரசாணை ஜூன் 4-ஆம் தேதியோடு முடியும் நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.