திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை அனுபவங்கள் குறித்துப் பேசிய சோனா, “ஒரு குறிப்பிட்ட படத்திற்குப் பிறகு நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க 16-க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகள் அனைத்தையும் நான் நிராகரித்துவிட்டேன். எனக்குப் பணத்தை விடச் சுயமரியாதைதான் முக்கியம். ரோட்டில் நின்று பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, சுயமரியாதையை இழந்து சம்பாதிக்கும் பணம் எனக்குத் தேவையில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

அந்தப் பேட்டியின் போது தொகுப்பாளர் அசார், “யாரையாவது அடிக்க வேண்டும் என்று தோன்றினால் யாரைச் சொல்வீர்கள்?” என்று கேட்டார். அதற்குத் தயங்காமல் பதிலளித்த சோனா, “நிச்சயமாக நடிகர் வடிவேலுவைத் தான்” என்றார். இதற்குக் காரணம் ‘குசேலன்’ படத்திற்குப் பிறகு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களா? என்ற கேள்விக்கு, “ஆமாம், ஆனால் என்ன காரணம் என்பதை இப்போது வெளியில் சொல்ல முடியாது” என்று மர்மமாகப் பதிலளித்தார்.

தொடர்ந்து சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “யாருக்கு முத்தம் கொடுக்க விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்கு, “நடிகர் விஜய் இப்போது தலைவராகிவிட்டார், அதனால் அவரைச் சொல்ல முடியாது. மற்றபடி நடிகர் ஹரிஷ் கல்யான் மற்றும் அசோக் செல்வன் ஆகியோருக்குக் கொடுக்கலாம். இப்போது என்னை அவர்கள் ‘நோ ஆண்ட்டி’ என்று சொல்லிவிட்டால் கதை முடிந்துவிடும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் திரையுலகில் வடிவேலுவின் மீதான சோனாவின் இந்தப் பகிரங்கக் குற்றச்சாட்டு தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.