வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அங்குள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, திபு சந்திரதாஸ் மற்றும் அம்ரித் மண்டல் ஆகியோருக்கு எதிராக நடந்த துயரச் சம்பவங்கள் அந்நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வங்காளதேசத்தில் வசிக்கும் சுமார் 2 கோடி சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அந்நாட்டின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வங்காளதேசத்தின் ஸ்திரத்தன்மை என்பது இந்தியாவின் பாதுகாப்புடன், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்போடு நேரடியாகத் தொடர்புடையது என்று ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது ஆதரவு உண்டு என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் சீனா போன்ற இந்தியாவிற்கு எதிரான சக்திகள் அங்கு நிலைகொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், வரும் பிப்ரவரி மாதம் அங்கு நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான சுமுக உறவு மேலும் மேம்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
