“ஃபேஸ்புக் லைவ் போட்டபடி தற்கொலை முயற்சி” – இந்தச் செய்தி உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினரை அலற வைத்துள்ளது. 17 வயதே ஆன அந்தச் சிறுமி, திடீரென ஃபேஸ்புக் நேரலையில் தோன்றி, தன் கையில் இருந்த ஏராளமான மாத்திரைகளை ஒவ்வொன்றாக உட்கொள்வதைக் காட்டியுள்ளார்.

இதைப் பார்த்த அவரது நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே சைபர் கிரைம் உதவியுடன் அந்தச் சிறுமி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். மின்னல் வேகத்தில் அந்த இடத்திற்குச் சென்ற போலீஸார், மயக்க நிலையில் இருந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சரியான நேரத்தில் போலீஸார் சென்றதால் அந்தச் சிறுமியின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது. “சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான செயல்களைச் செய்யாதீர்கள்” என எச்சரித்துள்ள போலீஸார், அந்தச் சிறுமி ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.